×

தனிநபர்களுக்கு செல்போன் ஒட்டு கேட்பு தகவலை வழங்க டிராய்க்கு உத்தரவிட முடியாது: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

புதுடெல்லி: ‘செல்போன் ஒட்டு கேட்பு விவரங்களை தனிநபர்களுக்கு தர தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (டிராய்) உத்தரவிட முடியாது’ என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வக்கீல் கபீர் சங்கர் போஸ் என்பவர் தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறதா, எந்த அரசு அமைப்பால் ஒட்டு கேட்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களை வழங்கக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தார். இத்தகவலை வழங்க டிராய் மறுத்ததை தொடர்ந்து, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த தலைமை தகவல் ஆணையர், சம்மந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து தகவல்களை பெற்று மனுதாரருக்கு வழங்க டிராய்க்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து டிராய் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தலைமை தலைமை ஆணையர் உத்தரவை உறுதி செய்து கடந்த 2021ல் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து டிராய் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி விபு பக்ரு தலைமையிலான அமர்வு, ‘‘அரசின் வழிகாட்டுதலின்படியும், நாட்டின் இறையாண்மை மற்றும் நலனுக்காக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே இதுபோன்ற தகவல்களை தனிநபர்களுக்கு வழங்கினால் நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால் ஆர்டிஐயில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம்’’ என தீர்ப்பளித்தது.

The post தனிநபர்களுக்கு செல்போன் ஒட்டு கேட்பு தகவலை வழங்க டிராய்க்கு உத்தரவிட முடியாது: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : TRAI ,Delhi High Court ,New Delhi ,Telecom Regulatory Authority ,Dinakaran ,
× RELATED டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில்...